கிளிக்கு முளைத்த றெக்க

Thirumurugan
4 min readDec 6, 2019

TLDR; கார் ஓட்டத் தெரியாம, ஆஸ்ட்ரேலிய சிட்டிகளில் வேணா காலம் தள்ளலாம். ரீஜியனல் ஏரியாவில் நாள்கூட தள்ளமுடியாது. so, learn to drive as soon as you come to Australia, if not before.

முதல் வேலை கொடுக்கும்போது கார் ஓட்ட லைஸன்ஸ் கண்டிப்பாய்த் தேவை என்று சொல்லிவிட்டார்கள். பேப்பர் செய்யத் தேவையான மரங்களை விளைவிக்கும் வனவியல் (Forestry) நிறுவனம் என்பதால் இந்த கூடுதல் விதிமுறை. என்னுடைய வேலை என்னமோ அலுவலகத்தின்தான்; ஆனால், ஆறு மாதத்தில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம்.

அடிலைடில் (Adelaide) இருந்த வரை பஸ், ட்ரெய்ன் மற்றும் நண்பர்களின் கார்கள் என்று சொகுசாய் பயணித்துவிட்டு மேற்கு விக்டோரியாவில் (South-western Victoria) இருக்கும் ஹேமில்ட்டன் (Hamilton) சென்று சேர்ந்தபோது, டாக்ஸி மட்டுமே போக்குவரத்துக்கு வழி என்ற நிலைமை. காடு மாடு தெரியாமல் ஓடியாடி, புல், பூ, கங்காரு என்று படம் பிடிக்கும் கலைஞனைக் (!), கூண்டில் அடைத்த காலத்தின் கோலத்தை எப்படிச் சொல்வேன்!

Awesome Australia by Thiru

ஆஸ்ட்ரேலியர்கள் அவர்களின் வாழ்நாளில் 75%-ஐ காரில் கழிப்பார்கள் (Car is a moving home!) என்பது என் கணிப்பு. கார் ஓட்ட கொஞ்சமும் சளைக்க மாட்டார்கள். பரந்து விரிந்த ஆஸ்ட்ரேலிய நாட்டில், நாள், வாரக் கணக்கில் பயணம் செய்துகொண்டேஏஏஏஏஏஏ இருந்தால்தான் அக்கரையைப் பார்க்க முடியும்!

அப்போது கார் ஓட்டக் கற்றுக்கொடுக்க மணிக்கு 50 டாலர்கள்; அதில் பாதிதான் என் ஒரு மணி நேர வருமானம். 500 டாலர் பட்ஜெட் — 10 மணி நேரப் பாடங்களில் — கற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிக்கோள்.

முதல் 3 வகுப்புகளில் (வாரம் ஒரு வகுப்பு!), காரின் சகல கண்ட்ரோல்களையும் தெரிந்துகொண்டேன். கூட வேலை பார்க்கும் அவ்வப்போது நச்சரித்து, அவர்களின் கார்களை வாங்கி, அவர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு (இந்த ஆஸிகளுக்குத்தான், எவ்ளோ துணிச்சல்!) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பழகினேன். ஒரு மணி நேர வகுப்பென்றால், குறைந்தது 5 மணி நேரம், மற்றவர்களிடம் பயிற்சி. இதனால், பல பேரிடமிருந்து பாதுகாப்பாய்க் கார் ஓட்டும் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன். பிராந்திய பகுதியில் வசிக்கும் ஆஸ்ட்ரேலியர்கள் அவர்களின் வாழ்நாளில் 75%-ஐ காரில் கழிப்பார்கள் என்பது என் கணிப்பு. கார் ஓட்ட கொஞ்சமும் சளைக்க மாட்டார்கள். பரந்து விரிந்த ஆஸ்ட்ரேலிய நாட்டில் நீங்கள் பயணம் செய்துகொண்டேஏஏஏஏஏஏ இருக்கலாம்.

6-ஆம் வகுப்பு வரும்போதே, கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளரிடம் சொல்லிவிட்டேன், ‘நான் ட்ரைவிங் டெஸ்ட் புக் செய்துள்ளேன்’ என்று. ‘ஆனால், நீ இன்னும் ரெடி ஆகவில்லை. உன்னால் பாஸ் பண்ண முடியாது. இன்னும் ஒரு கூடுதலாக 10 வகுப்பு ஆகலாம்’ என்றார். ‘நான் ட்ரை பண்றேன். பாஸ் பண்ணிட்டா நான் தனியாவே கார் ஓட்டக் கற்றுக்கொள்வேன்’ என்றேன். ‘என்னது..? பாஸ் பண்ணிட்டு, கத்துக்கப் போறீயா?’ என்று அதிர்ச்சி அடைந்தார் அப்பெண்.

அப்போது முப்பது டாலர்தான் ஓட்டுநர் தேர்வுக்கு கட்டணம். ஐம்பதுக்கு (x 10), முப்பது பரவாயில்லை, அதனால், ரிஸ்க் எடுப்பது சரி என்றே பட்டது! ஓட்டுநர் தேர்வில், இரண்டு வகை தவறுகளால் நீங்கள் தோல்வியடைய வாய்ப்பு உண்டு. தனக்கோ, மற்றவர்க்கோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தால் அது பெரிய தவறு — உடனடி ஃபெயில். உங்களை மேற்கொண்டு கார் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்த நண்பன், இந்தியாவில் நீண்ட நாளாக சொந்த கார் ஓட்டிக் கொண்டிருந்தவன், இப்படி ஒரு டிரைவிங் டெஸ்டில் தவறு செய்ய, காரை (இங்கேயும் சொந்த கார் தான்) பக்கத்தில் நிறுத்திவிட்டு, டாக்ஸி பிடித்து வந்த கதை உண்டு.

‘பாதிப்பு இல்லை இன்னும் கொஞ்சம் பயிற்சி இருந்தா நல்லா ஓட்டலாம்’ அது சிறிய தவறு. எட்டு சிறிய தவறுகளை அனுமதிப்பார்கள் (உ.தா: 50 km வேகப் பகுதியில் 35-ல் மெதுவாகப் போவது, அடிக்கடி, தேவையில்லாமல் பிரேக் போடுவது).

நான் எட்டுக்கு ஏழு தவறு செய்து விளிம்பில் தேர்வானேன். டிரைவிங் லைஸன்ஸ்தானே கேட்டிங்க, இந்தாங்கோ என்று ஆபீஸில் கொடுத்தாயிற்று. பிறகு, இன்னும் மூன்று மாதம் பயிற்சி நண்பர்களுடன். ஒரு 2000 டாலர் போட்டு, கார் ஓட்டிப் பழக ஒரு பழைய 1999 Mitsubishi Magna v6 காரை வாங்கினேன். விடுமுறை நாட்களில் ஆளில்லா கார் பார்க், ட்ராபிக் இல்லாத ரோடு என்று ஓட்டி பழகினேன். தனியாக ஓட்டும்போதே, என்னால் கூடுதல் கவனத்துடன் (பார்த்துச் சரி செய்ய யாருமில்லையே!) பாதுகாப்பாகவும், வேகமாகவும் கற்றுக்கொள்ள முடிந்தது.

லைஸன்ஸ் மற்றும் கார் இருந்த முதல் நாள் இவ்ளோ பெரிய்ய ஆஸ்ட்ரேலியாவே ரொம்பச் சின்னதாய் தோன்றியது. உண்மையாகவே றெக்க (இறகுகள்) முளைத்தன. போக்குவரத்து வசதிகள் இல்லா ஊரில் ஒரு வருடம் வாழ்ந்தபின், அடுத்தவரைச் சார்ந்தே இருந்த என்னுடைய பயணங்கள் சட்டென விரிவடைந்தன. அது உணரவேண்டிய விஷயம்!

மெல்பனா.. நாலு மணி நேரம், அடிலெய்டா..ஐந்தரை மணி நேரம்தான்..பெர்த் போக வேண்டுமா..வெறும் முப்பத்துமூன்று மணி நேரம்தான் என்று பின்னிப் பெடலெடுத்து ஊர் சுற்றினேன். ஆபீஸ் 5-மணிக்கு முடிந்தவுடன், தோன்றிய திசைகளில் காரை ஓட்டிச் செல்வேன், எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி படங்கள் எடுப்பேன். அற்புதமான நாட்கள், அவை!

அப்ப, இப்ப அழகான நாட்களா இல்லயான்னு கேக்கக்கூடாது. குடும்பமும், என்னைப் போலவே பயணங்களை விரும்புவதால், அவ்வப்போது நீண்ட பயணங்கள் செய்கிறோம். படங்கள் எடுப்பதற்காகவே அழகான இடங்களைத் தேடிப்போய் பார்ப்போம்.

இதுவரை நான் செய்ததில் சிறந்த சாலைப் பயணங்கள் கீழே. பெரும்பாலான இப்பயணங்கள் நண்பர்களோடு செய்ததுதான். லைஸன்ஸ் வாங்கும்முன், சும்மா உக்காந்தே சுற்றியது.

Awesome Australia by Thiru
Awesome Australia by Thiru
  1. அடிலைட் — ஒல்லங்காங் — ஸிட்னி — (Adelaide — Wollongong — Sydney)

2. ஹாமில்டன் — போர்ட் ஃபேரி — கிரேட் ஓஷியன் ரோட்ஃ — டிவெல் அபோஸல்ஸ் — அப்பல்லோ பே (Hamilton — Port Fairy — Great Ocean Road — Twelve Apostles — Apollo Bay)

3. பிரிஸ்பன் — காஃப்ஸ் ஹார்பர் — போர்ட் மெகொயிரி — ஸிட்னி (Brisbane — Coffs Harbour — Port Macquarie — Sydney)

4. பிரிஸ்பன் — க்ளாஸ் ஹவுஸ் மௌன்டைன்ஸ் — மேப்பில்டன் — மெலனி — மாண்ட்வில் — நேம்பூர் (Brisbane — Glass House Mountains — Mapleton — Maleny — Montville — Nambour)

5. ஹார்வி பே — பண்டாபர்க் — டௌன் ஆஃப் செவென்டீன் செவென்ட்டி (Town of 1770) — கிளாட்ஸ்டன் (Hervey Bay — Bundaberg — Town of 1770 — Gladstone)

6. கிம்ப்பி — — டின் கேன் பே — ரெயின்போ பீச் — நூஸா — ஸன்ஷைன் கோஸ்ட் (Gympie — Tin Can Bay — Rainbow Beach — Noosa — Sunshine Coast)

7. பெர்த் -ஜெரால்ட்டன் — கல்பாரி — ஷார்க் பே — மங்க்கீ மையா (Perth — Geraldton — Kalbarri — Shark Bay — Monkey Mia)

8. பெர்த் — மார்கரெட் ரிவர் — பஸ்ஸல்ட்டன் — அல்பெனி (Perth — Margaret River — Busselton — Albany)

9. பெர்த் — ஊபின் -பெரெஞ்சோறி — மொறவா — முளைவா (Perth — Wubin — Perenjori — Morawa — Mullewa)

10. மெல்பன் — பேலரட் — ஹாமில்ட்டன் — க்ராம்பியன்ஸ் — ஹால்ஸ் கேப் (Melbourne — Ballarat — Hamilton — Grampians — Halls Gap)

இன்னும் ஆஸ்ட்ரேலியாவில் பார்க்கவேண்டியவை 90% மீதம் இருக்கு. பார்த்ததில் அடியேனே பிடித்த 100 படங்கள் சின்னச் சின்னதாய் இங்கே. பெரியதாய் பார்க்க வேண்டுமெனில் பார்க்க Awesome Australia Flickr album.

இதனால் கூற வந்த கருத்து — கார் ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்; பயணப்பட்டு கிராமப்புற (regional) ஆஸ்ட்ரேலியாவை சுற்றிப் பாருங்கள்.

-திரு

--

--